Sunday, February 07, 2016

"எங்க தெரு" நாய்கள்

பராசக்தி ஸ்டைலில் சொல்லணும்னா நாய்களின் ”கூடாரமாகி” விட்டது எங்கள் தெரு. குறைந்தது, 12-15 நாய்கள் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எனது தெருவில் வசிக்கும் சமவயதினரான நண்பர் ஒருவர் தான். அவர் ஒரு மகா நாய்ப்பிரியர், பெர்முடாஸ் போட்ட பைரவர் போலவே காட்சியளிப்பார். அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வந்தார். ஒரு 6 மாதங்களுக்கு முன் ஒரு விடியற்காலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, ஐந்தே நிமிடங்களில் மரித்துப்போனார். அத்தனை ஆரோக்கியமாகத் தோன்றிய ஒருவர் இப்படி திடீரென்று மரணித்தது எங்கள் தெருவில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது! சரி, மேட்டருக்கு வருவோம்.

அவரின் பிரிய தெரு நாய்களுக்கும் அவர் மரணம் அதிர்ச்சியோடு, சோகத்தையும் தந்திருக்க வேண்டும். ஒரு 10 நாட்கள், இரவு வேளைகளில் ஆர்ப்பாட்டமாக குரைத்து, தெருவுக்குள் நுழைந்த எந்த ஒரு உயிரினத்திற்கும், பயமும், வெறுப்பும் ஏற்படுத்திய அவை, அமைதி காத்தன. அவ்வப்போது, அழுகையான ஓலத்தை மட்டும் வெளிப்படுத்தின. இரவுகளில் பல தடவை எங்கள் நிம்மதியையும், உறக்கத்தையும் குரைத்துக் குலைத்த நாய்கள் இப்படி ஆகி விட்டனவே என்று நானே அனுதாபப்பட ஆரம்பித்தபோது, எல்லா நாய்களும் பழைய நிலைக்குத் திரும்பி அவைகளும் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல என்று நிரூபித்தன.

என் அனுபவத்தில், எங்கத் தெரு நாய்கள் ரேசிஸம் அற்ற லிபரல்கள். இரவில் தெருவுக்குள் நுழையும் எவருக்கும், சாதி, இன, மத பேதமின்றி ஒரே வகை கவனிப்பு தான். ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை செல்லும் வரை, பின்னாலேயே கூட்டமாகச் சென்று பலவிதமாக சவுண்ட் விட்டு பயத்தையும் எரிச்சலையும் ஏற்றுவது. ஆனால், இதுவரை யாரையும் கடித்ததில்லை. ஆனால் பாருங்கள், அவைகள் கடிக்காது என்பது புதிதாக வரும் ஒரு நபருக்குத் தெரிவதில்லை. தூக்கம் வராத அல்லது தூக்கம் கெடுக்கப்பட்ட இரவுகளில், எங்கத் தெரு நாய்களின் நடவடிக்கைகளை பால்கனியில் நின்றபடி ”குரைப்பாராய்ச்சி” செய்ததுண்டு! சில சமயங்களில், வெறி அடங்காத குரைப்பை நிறுத்த தமிழ் சினிமா சொல்லித்தந்த ஒரு பாலபாடத்தையும் பிரயோகித்திருக்கிறேன், பால்கனியிலிருந்து பக்கெட் தண்ணீரை அவற்றின் மீது ஊற்றுவது (அ) இறைப்பது. பலனும் கிட்டியிருக்கிறது, தற்காலிமாக இருப்பினும். இனி எனது இரவு ஆராய்ச்சியின் முக்கிய முடிவுகள்:

 1. உற்சாகத் தருணங்களில் நாய்கள் மென்மையாகக் குரைக்கின்றன. புணர்ச்சிக்கான மார்கழி மாத பூசல்களின்போது குரைத்தலைக் குறைத்து, பற்களைக் காட்டி, நாய்கள் ஏற்படுத்தும் “ஓடிப்போயிடு மவனே, கொன்னேபுடுவேன்” வகை அடித்தொண்டை உறுமல்கள், அமானுஷ்ய அச்சத்தை விளைவிக்க வல்லவை.


பல மார்கழிகள் கண்ட (படத்தில் காணப்படும்) கறுப்பழகி ஒன்று பலப்பல குட்டிகளை ஈன்று, தெருவின் ”நாய்த்தொகை” குறையாமல் இருக்கும்படியாக சேவை ஆற்றியுள்ளதை இங்கே குறிப்பிடவேண்டும். தாய்மையால் பக்குவம் அடைந்த அது குரைப்பதேயில்லை!

2. மூத்தோர் இளையவரை டிசிப்ளின் செய்யும் பொருட்டும், குரைத்தல் நிகழ்கிறது.

3. வேற்றுத்தெரு நாய்கள் படையெடுப்பின்போது, போர்க்களமாகும் தெருவில் கேட்கும் குரைப்புச்சத்தம், Dolby ஸ்டீரியோவில் முழு வால்யூமில் ஜுராசிக் பார்க் படத்தை பார்க்கும் எஃபெக்டை தர வல்லது.

4. சில அரிதான சமயங்களில், ஒற்றை வேற்றுத்தெரு நாய், எங்கள் தெரு (நாய்) ஜோதியில் ஐக்கியமாக வர முயலும்போது, குரைத்தலோடு நிகழும் விஷயங்கள் சுவாரசியமாய் இருக்கும். அந்த நாய், தலையைத் தொங்கப்போட்டு, கூனிக்குறுகி வந்தாலும், எங்கத் தெரு நாய்கள் அதை உடனே கூட்டாளியாகச் சேர்ப்பதில்லை. ரொம்பவும் Harass பண்ணும். போக்கடமற்ற புதிய நாயும், ஓடிப்போகாமல், ஒரு காருக்கு அடியில் ஒளிந்து கொண்டு, கெஞ்சிய வண்ணம் இருக்கும். சில சமயங்களில், தலைவரின் முடிவுப்படி, புதிய நாய் அங்கீகரிக்கப்படும். அல்லது, கார் மாற்றி மாற்றி வெகுவாக அலைக்கழிக்கப்பட்டு, கடியும் பட்டுத் துரத்தப்படும். இந்த குரைத்துத் துரத்தும் வைபவத்தைக் காண்பது, டிவிட்டர் அரட்டையை விட டைம்பாஸாக இருக்கும்.5. திருவல்லிக்கேணியின் மூத்தகுடி என்று சொல்லும் அளவு பிரபலமானவை மாடுகள். இரவில் ஒரு மாடு எங்கள் தெருவுக்குள் நுழைந்து விட்டால், அதன் கதி அதோகதி தான். எல்லா நாய்களும் அதைச் சூழ்ந்து கொண்டு பண்ணும் Ragging-ல் ”கொம்பைக் காணோம், வாலைக் காணோம்” என்று (நடக்கவே யோசிக்கும்) அந்த சோம்பேறி மாடு ஓடுவது செம :-)

6. எங்கத் தெரு நாய்கள் டிராஃபிக் விதிகளை மதிப்பவை. தெருவில் செல்லும் பைக், சைக்கிள் ஓவர் ஸ்பீடிங் செய்தால் மட்டுமே துரத்தும், இல்லையெனில், சின்னக்குரைத்தலோடு விட்டு விடும்.

மேற்சொன்ன எங்கத் தெரு இரவுக்காவலர்கள், “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இது தான் எங்கள் உலகம்” என்பதற்கேற்ப பகல் வேளைகளில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சுருண்டு தூங்கும்போது, ‘இதுகளா இப்படி?” என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

---எ.அ.பாலா

9 மறுமொழிகள்:

said...

அடடா! என்னவொரு ஆராய்ச்சி. எத்தனையெத்தனை வகையான நாய்கள்.

மொதல்ல நீங்க டிவிட்டர் பேஸ்புக் பத்தித்தான் பேசுறீங்கன்னு நெனச்சேன். அப்புறந்தான் உண்மையான நாயாராய்ச்சின்னு புரிஞ்சது.

ஹைலைட் என்னன்னா கருப்பழகிதான். தாய்மை கொடுத்த பக்குவம் நாய்களுக்கும் வருவது இறைவன் கொடுத்த வரமே. நாயே ஆனாலும் தாயே தெய்வம்.

enRenRum-anbudan.BALA said...

Test comment

enRenRum-anbudan.BALA said...

//நீங்க டிவிட்டர் பேஸ்புக் பத்தித்தான் பேசுறீங்கன்னு நெனச்சேன்//
சும்மா போற போக்கில் அடிச்சு விட்டுப் (அப்படியே போட்டுக் கொடுத்துட்டுப்) போகறதில், நீங்க கில்லாடி என்பது இப்ப புரிகிறது ;-))))))

பேய் ஆராய்ச்சி இங்க இருக்கு: http://balaji_ammu.blogspot.in/2007/04/331.html
இப்ப நாய் ஆராய்ச்சி, அப்றம் என்ன பண்ணப்போறேன்னு காலம் தான் சொல்லணும் :-)

அன்புடன்
பாலா

தி.தமிழ் இளங்கோ said...

நாய்கள் என்றால் பயத்தோடு அணுகுபவர்கள் நிறைந்த இந்த காலத்தில்,அவைகளைப் பற்றி வித்தியாசமான அன்புடன் அணுகிய,ஓர் அலசல்.நானும் தெரு நாய்களை நேசிப்பவன்தான். ஒரு பதிவுகூட எழுதியுள்ளேன்.

enRenRum-anbudan.BALA said...

தமிழ் இளங்கோ அவர்களே,
தங்கள் வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. என் வலைப்பூவில் உள்ள இன்ன பிற இடுகைகளில் சிலபல தங்களுக்குப் பிடிக்கலாம். தேர்ந்தெடுத்து வாசிக்கவும்.
அன்புடன்
பாலா

கிரி said...

செம்ம :-)

"எங்கத் தெரு நாய்கள் டிராஃபிக் விதிகளை மதிப்பவை. தெருவில் செல்லும் பைக், சைக்கிள் ஓவர் ஸ்பீடிங் செய்தால் மட்டுமே துரத்தும், இல்லையெனில், சின்னக்குரைத்தலோடு விட்டு விடும்"

ஹா ஹா ஹா

"பகல் வேளைகளில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சுருண்டு தூங்கும்போது, ‘இதுகளா இப்படி?” என்ற பிரமிப்பு ஏற்படுகிறது."

கலக்கல் :-) . நாய் ஆராய்ச்சி அசத்தல் ;-)

Parisal Krishna said...

அந்த ரெண்டாவது பாய்ண்ட்... :-))))))))))))))))))))))))

முரளிகண்ணன் said...

பலத்த ஆராய்ச்சி. தீஸிஸே எழுதலாம் போல. :-)

enRenRum-anbudan.BALA said...

கிரி, முரளிகண்ணன்,
வாசிப்புக்கும், பாராட்டுக்கும் நன்னி ஹை :-) ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஜாலி நகைச்சுவை இடுகை

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails